|
"ஈரோஸ்" இயக்கம் என்றோ கலைக்கப்பட்டுவிட்ட நிலையில் காணாமல் போனவர்களை வைத்துக் கொண்டும், காளான்களை வைத்துக்கொண்டும் காலாவதியாகி விட்ட அந்த இயக்கத்துக்கு உயிர்கொடுக்கும் வேலையில் இந்தியப் புலனாய்வு அமைப்பான "றோ" இறங்கியிருக்கிறது.
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட விரும்புவதால், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஒதுங்கிக்கொண்டார் என்று சென்னையில் இருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தைச் சேர்ந்த "தமிழன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.
கடந்த 23.08.2007 ஆம் நாள் வெளிவந்த அந்த வார இதழின் முகப்புக்கட்டுரையாக, உளவுத்'துரை'யின் புலனாய்வாக, "விலகுகிறேன் - பிரபாகரன் அதிரடி முடிவு" என்று தலைப்பிட்டு பரபரப்பை உருவாக்கி உள்ளது "தமிழன் எக்ஸ்பிரஸ்".
கலைக்கப்பட்ட "ஈரோஸ்" அமைப்பின் வாரிசுகள் என்று கூறிக்கொள்ளும் சில லண்டன் நபர்கள், இந்திய தலையீட்டிற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்த லண்டன் நபர்களின் நப்பாசைகள்தான் "தமிழன் எக்ஸ்பிரஸ்" கட்டுரையின் ஊடாக அம்பலத்திற்கு வந்துள்ளன.
இந்திய அரசின் உளவுப்பிரிவான றோவின் கயிறுகளையே தொடர்ந்து விழுங்கி வரும் இந்த லண்டன் நபர்கள் தங்கள் பங்கிற்கு நீளக்கயிறு ஒன்றையும் அவிழ்த்து விட்டுள்ளனர்.
அதாவது, பேச்சுவார்த்தையில் இந்தியா தலையிடும் பட்சத்தில், பிரபாகரனும், பொட்டுவும் தாங்கள் துங்கிக் கொள்ளத் தயார் என்று தமக்கு உத்தரவாதமளித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த "ஈரோஸ்" என்று அழைத்துக் கொள்கிற நபர்கள்தான் அண்மையில் லண்டனில் மாநாடு ஒன்றையும் நடத்தினர்.
இந்த மாநாட்டில் பிரபாகரனும், பொட்டம்மானும் இல்லாத நிலையொன்று உருவானால் இந்தியத் தலையீட்டிற்கான வாய்ப்புக்கள் உண்டு என்றும், அந்த வகையான நிலையில் தமிழருக்கு விமோசனம் ஏற்படலாம் என்றும் ஒரு கருத்தாடல் நடைபெற்றதையும் நினைவில் கொள்ளலாம்.
புலிகள் பலவீனமாக இருப்பதாக கருதி, முன்னாள் றோ அதிகாரி சந்திரனையும், அறிஞர் தேசாயையும் அழைத்து புதிய பாதையை உருவாக்க கனவு கண்டு அரும்பாடுபட்டு அந்த மாநாட்டை நடாத்தியிருந்தனர். பலவீனமாகக் கருதப்பட்ட புலிகள் வான்வெளியில் உறுமத் தொடங்கியவுடன் இந்த சலசலப்புகளும் அடங்கிவிட்டன.
இந்த வகையறாக்களை நோகடிக்க மற்றொரு "ஈரோஸ்" முளைவிடத் தொடங்கியது.
காலஞ்சென்ற ஈரோசின் இராணுவப் பொறுப்பாளர் சங்கர்ராஜியின் மகன் நேசன் என்பவர் தானே உண்மையான "ஈரோஸ்" என்று கூறிக்கொண்டு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்தவை சந்தித்தார்.
றோவின் கையாளாக சங்கர்ராஜி மாறியமையை உறுதி செய்த போது தான் "ஈரோஸ்" இயக்கம் கலைக்கபட்டது. பின்னர் றோவினால் கைவிடப்பட்டு பெருந்தொகைப் பணத்துடன் கைதாகி சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டவர் இந்த சங்கர்ராஜி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஜூலைப் படுகொலை நினைவுரல் நிகழ்வின் போது லண்டன் காவல்துறையின் வாகனத்துள் அமர்ந்தபடி ஈழத்தேசிய செயற்பாட்டாளர்களை அடையாளம் காட்டியவர் இந்த சங்கர்ராஜியின் மகன் நேசன்தான்.
இந்திய உளவுப்பிரிவிற்கு மாநாடு கூட்டிய ஆட்களும், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுடன் இணைந்துவிட்ட சங்கர்ராஜியின் மகன் நேசனும் கலைக்கப்பட்ட ஈரோசின் இரு பிரிவுகளாக செயற்படுகின்றனர்.
தானே ஈரோசின் உரிமையாளர் என்று பிரகடனம் செய்யும் சங்கர்ராஜியின் மகன் நேசனின் உரிமை கோரலை முறியடிக்கவே இந்தியா சென்றுள்ளது மாநாடு கூட்டிய இன்னொரு குழு.
மாநாடு நடத்தியோருக்கும் நேசன் என்ற புதிய வரவுக்கும் இடையேயான முரண்பாடுகளையும், மோதல்களையும் உள்வாங்கிக்கொண்ட இந்திய புலனாய்வுக்கூட்டம் கட்டவிழ்த்து விட்டதையே "தமிழன் எக்ஸ்பிரஸ்" உளறிக் கொட்டி விட்டிருக்கிறது.
தமிழன் எக்ஸ்பிரசில்தான் இந்திய றோவின் முன்னாள் பணியாளரும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஊடகங்களிலே நச்சுக் கருத்துகளை பரவிவிட்டும் எழுதுகிற பி.இராமன், தொடர் கட்டுரைகளை எழுதி வருகிறார் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.
இந்த லண்டன் மாநாட்டு ஆட்களில் ஒருவர், புலிகளுக்கும் இந்தியாவிற்கும் நட்புப்பாலமாக இருப்பதாக தம்பட்டம் அடித்து மூக்குடைபட்ட பழைய கதையும் ஒன்று உண்டு.
இந்தியத் தூதரக விருந்து ஒன்றில் புலிகளின் தலைவரைச் சந்தித்தேன் என்று உளற, அதையே இந்திய ஆங்கிலப் பத்திரிகையில் அம்பலமாக்கி ஆப்பு வைத்தது இந்திய உளவு நிறுவனம். அந்தத் துன்பியல் நிகழ்வின் பின் வன்னிப்பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை அந்த ஆள்.
மாவீரரான புலிகளின் தளபதி ஒருவரின் இரத்த உறவு என்கிற மரியாதையின் நிமித்தம் தேசியத்தலைவர் சந்தித்த நிகழ்வினை அந்த நபர் தனது நாற்காலிக் கனவிற்கு சாதகமாக பயன்படுத்தியதன் விளைவே அந்த மூக்குடைபட்ட கதை.
தத்துவக் குடுமி கட்டி இந்தியாவில் அலையும் இந்த சருகுகள் ஹரிகரன் போன்ற ஆய்வாளர்களுக்கும் வலை வீசிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவினை சீர்குலைக்க இந்திய உளவு நிறுவனம் மேற்கொள்ளும் சதி முயற்சிக்கு படைக்காய்களாகி உள்ளன இந்த லண்டன் கும்பல்.
தங்கள் வாழ்நாளில் தாயக மண்ணையே மிதித்தறியாத இந்த நபர்கள்தான் தலையால் கிடங்கு கிண்டி காலமாகிப் போய்விட்ட ஈரோசுக்கு உயிரூட்டப் போகின்றனராம்!. காலாவதிகளுக்கும் காலம் காலமாக உயிரூட்டிம'தான் பார்க்கிறது "றோ". ஆனால் காலமோ எப்போதுமே றோவுக்கு எதிர்திசையில்தான் பயணித்து வருகிறது.
|